Tamilசெய்திகள்

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் மேம்பட்ட இதய ஆதரவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, உயிர்காக்கும் அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது

வயது முதியவர் ஒருவருக்கு அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பில் இருந்து, ‘எக்மோ’ (ECMO) நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவர்கள் அவரது உயிரை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட முதியவர் ‘எஸ்டி-எலிவேஷன் மயோகார்டியல் இன்ஃபார்க்சன்’ (STEMI) எனப்படும் மிகத் தீவிரமான மாரடைப்பு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது இதயத்தின் இடது முக்கிய தமனியிலும், பிற பெரிய இரத்த நாளங்களிலும் கடுமையான அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை பம்ப் செய்ய இயலாத ‘கார்டியோஜெனிக் ஷாக்’ என்ற உயிருக்கு ஆபத்தான நிலையும் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் போது, நோயாளிக்கு இதயத் துடிப்பில் உயிருக்கு ஆபத்தான சீரற்ற நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால், இரத்த ஓட்டம் முற்றிலும் தடைபட்டது. உடனடியாக உயிர் காக்கும் இதய – சுவாச மீட்பு (CPR) நடவடிக்கை மூலம் அவரது இதயத் துடிப்பு மீட்டெடுக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. எனவே, மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இன்ட்ரா-அயோர்டிக் பலூன் பம்ப்’ (IABP) சிகிச்சையை, ‘எக்மோ’ (ECMO) சிகிச்சையாக உடனடியாக உயர்த்தி தொடங்கினர்.

IABP என்பது, ஒரு பலூன் அடிப்படையிலான ஒரு கருவியாகும். இது இதயத்தின் முக்கிய இரத்த நாளத்தில் சீரான இடைவெளியில் விரிந்து, சுருங்குவதன் மூலம் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது. இருப்பினும், தீவிரமான இதய பாதிப்பு அல்லது மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்க இன்னும் உயரளவிலான ஆதரவு தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில், ‘எக்மோ’ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது இரத்தத்தை உடலுக்கு வெளியே உள்ள ஒரு இயந்திரத்தின் வழியாகச் செலுத்தி, அதில் ஆக்சிஜனைச் சேர்த்து, மீண்டும் உடலுக்குள் செலுத்துகிறது. இதன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை இந்தக் கருவி தற்காலிகமாகத் தானே ஏற்றுக்கொள்கிறது. இதயம் தானாகச் செயல்பட முடியாத இக்கட்டான நிலையிலும், உடலின் முக்கிய உறுப்புகளுக்குத் தேவையான இரத்தத்தையும் ஆக்சிஜனையும் தடையின்றி வழங்க இந்த நவீன கருவி உதவுகிறது.

இரத்த ஓட்டம் சீரான பிறகு, டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட் பொருத்தும் சிகிச்சை மூலம் இதயத் தமனிகளில் இருந்த அடைப்புகளை வெற்றிகரமாக நீக்கினர். நீண்ட கால தீவிர சிகிச்சை மற்றும் பல்வேறு துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த பராமரிப்புக்குப் பிறகு, நோயாளியின் உடல்நலம் படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட எக்மோ ஆதரவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த முதியவர் சீரான உடல்நிலையோடு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

அதன்பிறகு அவருக்கு நடத்தப்பட்ட தொடர் பரிசோதனைகளில், அவரது இதயச் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் முன்னேறியிருப்பது தெரியவந்தது. மாரடைப்பின் போது முற்றிலும் செயலிழந்திருந்த அவரது இதயத் துடிப்பு, தற்போது 53 சதவீத அளவிற்கு இயல்பான செயல்பாட்டிற்கு திரும்பியுள்ளது. இது அவர் மீண்டும் தனது அன்றாட வாழ்க்கையை இயல்பாக மேற்கொள்ள இது வழிவகுத்திருக்கிறது.

இது குறித்து டாக்டர் பாபு ஏழுமலை கூறுகையில், “இன்று இதய சிகிச்சையில் அதிநவீன இயந்திர தொழில்நுட்பங்கள் (MCS) மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. சிக்கலான மற்றும் அதிக ஆபத்துள்ள இதய சிகிச்சைகளின் போது, ‘இம்பெல்லா’ மற்றும் எக்மோ போன்ற கருவிகள் மருத்துவர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளன. முன்பு மிகக் கடுமையான சிக்கல்கள் காரணமாகச் சிகிச்சை அளிக்க கடினமாகக் கருதப்பட்ட பல நோயாளிகளை, இன்று இத்தொழில்நுட்பங்களைக் கொண்டு நம்மால் பாதுகாப்பாகக் குணப்படுத்த முடிகிறது. முன்பு சிக்கலான சிகிச்சைகளுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட நோயாளிகள், தற்போது இந்த நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வெற்றிகரமாகக் குணமடைகின்றனர். இது நோயாளிகளின் உயிர் பிழைக்கும் விகிதத்தையும், விரைவான மீட்சித்திறனையும் அதிகரிக்கிறது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “மேம்பட்ட மெக்கானிக்கல் சர்குலேட்டரி சப்போர்ட் (MCS) கருவிகள், இதயச் செயல்பாடு மிக மோசமாக உள்ளவர்களுக்கும் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இத்தொழில்நுட்பங்கள் இதயத் தசை மீட்சியடைவதற்கும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகின்றன,” என்று தெரிவித்தார்.