Tamilசெய்திகள்

கனிமொழி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை குழுவினர் ஆலோசனை

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் நேற்று தூத்துக்குடியில் இருந்து கருத்து கேட்பு கூட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., எழிலரசன் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், மீனவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மீனவர்கள் வழங்கினார்கள். விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர்.

வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.வி.எம். சானலை தூர்வார வேண்டும், குளங்களை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார்கள்.

இதே போல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் மனு வழங்கப்பட்டது. வணிகர்களை அரசு ஊழியர்களுக்கு இணையாக நடத்துவதற்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதிய பணபலன்களும், குடும்ப பாதுகாப்பு நலநிதி காப்பீடு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி அறிவிக்க முன்மொழிந்திட வேண்டும்.

ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் நோயாளிகள் மாணவர்கள் நலன் கருதி ரூ.1000-த்துக்கு குறைவான விடுதி கட்டிடங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.

மீன் வலை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் நாகூர்கான் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், கொல்கத்தா, மும்பை துறைமுகங்கள் வழியாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் இறக்குமதியாகும் வலைகளை தடுப்பதுடன் மலிவுவிலை சீனப் பொருட்களுடன் மறைத்து இறக்குமதி செய்யப்படுகின்ற சீன வலைகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். விவசாய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு இருப்பது போன்று மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் மீன் வகைகளுக்கும் பூஜ்ஜியம் சதவீத வரி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள், குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகிகள், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு நிர்வாகிகளும், கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அவைத் தலைவர் எப்.எம் ராஜரத்தினம் பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்ட பொதுமக்களிடமும் கனிமொழி எம்.பி. கருத்துக்களை கேட்டு அறிந்தார்.