Tamilசெய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நாளை விசாரிப்பு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு நடந்து வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு அவர் உடனே ஒப்புதல் வழங்குவதில்லை. பல்வேறு விளக்கங்கள் பெற்று அதன் அடிப்படையில்தான் ஒப்புதல் வழங்கி வருகிறார். அதே போல் சட்ட மசோதாக்களுக்கும் உடனே ஒப்புதல் வழங்குவது இல்லை.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து தமிழக அரசு, கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு நாளை (20-ந்தேதி) திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவி அவசரமாக, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த, 10 மசோதாக்களையும் கடந்த 13-ந்தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (சனிக்கிழமை) அவசரக் கூட்டமாக கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதாக்கள் உள்பட 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பாரா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.

சுப்ரீம் கோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் இன்றே அவர் இதில் முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து திடீரென அவசரமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார். கவர்னருடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.

டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் இது தொடர்பாக கலந்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கவர்னர் மீது, தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது கவர்னர் தரப்பில் மசோதா மீது எடுக்கப்பட்ட முடிவு பற்றி கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காகவே உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இன்று அவர் டெல்லி செல்ல உள்ளார்.

கவர்னரின் திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை வந்திருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். அப்போது கவர்னருடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் பல்வேறு தரப்பு விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.