Tamilசெய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பா.ஜ.கவில் இணைந்தார்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார். சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக டெல்லியிலேயே தங்கி உள்ளார். சட்டசபை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர்களுடன் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நட்டா, மத்திய மந்திரி அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது விஜயதாரணி எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் இணைந்தார். அதை தொடர்ந்து மத்திய மந்திரி அமித் ஷா, தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

விஜயதாரணி விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று இருக்கிறார்.