Tamilசெய்திகள்

காங்கிரஸ் எம்.பி-க்களுடன் மீண்டும் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி முடிவு!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண், டெல்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் அனுமதியின்றி, அவர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் போலீசார் அவசரமாக உடலை தகனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களின் கிராமத்தை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி வரும் அரசியல் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் ஆகியோரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளினர். இதுபோன்ற சம்பவங்களால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார்கள். அவர்களுடன் காங்கிரஸ் எம்பிக்களும் ஹத்ராஸ் நோக்கி செல்ல உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் உயர் சாதி வகுப்பினர் பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டியதாகவும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கொடூர குற்றச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடததப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், எஸ்.பி., டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் மற்றும் சில அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.