Tamilசெய்திகள்

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது இன்று டெல்லியில் கூடுகிறது

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம்- தமிழ்நாடு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. கர்நாடக அணைகளில் தண்ணீர் மோதுமான அளவில் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி (இன்று) வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதேபோல் கர்நாடக அரசு முறையிட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது. கடந்த சில நாட்களில் தண்ணீர் திறப்பதை 3 ஆயிரம் கனஅடியாக கர்நாடக அரசு குறைத்துவிட்டது. இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கர்நாடக அரசு நடந்து கொள்வதால் இன்று நடைபெற காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

இந்த சூழலில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் தினமும் குறைத்துக் கொண்டே வருகிறது. கடந்த சனிக்கிழமை காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு 2787 கனஅடி வீதம் தண்ணீர்தான் கர்நாடக அரசு திறந்துவிட்டது.