Tamilசெய்திகள்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார். இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கிருந்து காரில் புறப்பட்டு அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

விழாவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதேபோல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.