Tamilசெய்திகள்

கேரள குண்டு வெடிப்பு – பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்ேததி குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45), இடுக்கி மாவட்டம் தொடு புழா பகுதியை சேர்ந்த குமாரி(53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். அ வர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த சதித் திட்டத்தை நிறைவேற்றியது தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குண்டுவெடிப்பு சதியில், தான் ஒருவர் மட்டும் தான் ஈடுபட்டதாக டொமினிக் மார்ட்டின் கூறியிருந்தாலும், வேறு சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆகவே டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி குண்டு சதியில் அவருடன் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய, அவரிடம் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பில் மேலும் ஒரு பெண் இறந்துவிட்டார். அவர் களமச்சேரியை சேர்ந்த மோலி ஜாய்(61) ஆவார். எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் ஒரு பெண் இறந்ததையடுத்து, களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் 19 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 9பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.