Tamilசெய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் ஐப்பசி மாத பூஜைகளையொட்டி சாமி தரிசனத்துக்கு அய்யப்ப பக்தர்களை அனுமதிப்பது. கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன், சுகாதார துறை மந்திரி கெ.கெ.சைலஜா, போக்குவரத்து துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன், மின்சார துறை மந்திரி எம்.எம். மணி, நீர் வளத்துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் வாசு கூறியதாவது:-

மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினசரி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும். நெய் அபிஷேகம் நடைபெறாது.

அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும், ஐப்பசி மாத பூஜையின் போது பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிப்பது குறித்து தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகள் குழு முடிவு செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநில மந்திரிகளுடன் ஆன்லைன் மூலம் கலந்தாலோசித்து பக்தர்கள் தரிசனம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

கொரோனா தொற்று பாதித்த பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்காக நிலக்கல் உள்பட பல்வேறு இடங்களில் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். பக்தர்கள் தரிசனம் முடிந்த உடன் மலை இறங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

கூட்டம் கூடாத வகையில் சிறிய வகையில் அன்னதானம் நடத்தலாம். சபரிமலை துப்புரவு பணிகளுக்கு சானிட்டேசன் சொசைட்டி மூலமாக தமிழ்நாட்டில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள். கேரள அரசு பஸ்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

மண்டல, மகர விளக்கையொட்டி நடத்தப்படும் தங்க அங்கி, திருவாபரண ஊர்வலங்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி நடத்தப்படும். 10 வயதிற்கு குறைவான பக்தர்களும், 65 வயதிற்கு கூடுதலான பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.