Tamilசெய்திகள்

சூடானில் இருந்து இதுவரை 2500 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டடுள்ளனர்

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் அங்கு வசிக்கும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையை அந்தந்த நாடுகள் தொடங்கி உள்ளன.

சூடானில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதாக தெரிகிறது. அவர்களை பத்திரமாக மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ என்ற மீட்பு நடவடிக்கையை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது. தலைநகர் கார்டூம் மற்றும் சண்டை நடக்கும் பகுதிகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள், பஸ்கள் மூலம் போர்ட் சூடான் நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானங்கள் அல்லது இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானங்களிலோ அல்லது பயணிகள் விமானங்களிலோ இந்தியாவுக்கு கூட்டிச் செல்லப்படுகிறார்கள்.

முதல் தொகுப்பாக, கடந்த 26-ந் தேதி 360 இந்தியர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். நாள்தோறும் விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில், நேற்று மேலும் 186 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து சேர்ந்தனர். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

அதே சமயத்தில், போர்ட் சூடானில் இருந்து 122 இந்தியர்கள் நேற்று ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுவரை மொத்தம் சுமார் 2 ஆயிரத்து 500 இந்தியர்கள் தாயகம் வந்து சேர்ந்து இருப்பதாக அரிந்தம் பாக்சி கூறினார். அவர்களுடன் சேர்த்து சூடானில் இருந்து இதுவரை 3 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கைக்காக ஜெட்டா, போர்ட் சூடான் ஆகிய நகரங்களில் இந்தியா கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. மேலும், கார்டூம் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. அத்துடன், டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சக தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறது.