Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை வழியாக 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திக்வார் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து இந்திய ராணுவம் உஷார் ஆனது. குப்வாரா தங்தார் செக்டாரில் உள்ள டக்கேன்-அம்ரோஹி பகுதியில் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.

அவனிடம் இருந்து பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரகதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் 32 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும். இதேபோல் தங்தார் பகுதியில் இந்திய ராணுவம் குப்வாரா போலீசாருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர்.

அந்த பயங்கரவாதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில மணி நேரத்தில் நடந்த 2-வது ஊடுருவல் முயற்சி இதுவாகும். தொடர்ந்து இந்திய ராணுவம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.