Tamilசெய்திகள்

தாராபுரம் பா.ஜ.க நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் – அண்ணாமலை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியின் 100-வது மன் கீ பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வினருக்கும், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. நடுரோட்டில் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தநிலையில் தாராபுரம் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் வன்முறையில் ஈடுபட்டு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து கீழ்க்கண்ட நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் அணி கொங்கு ரமேஷ், தாராபுரம் நகர மண்டல் தலைவர் விநாயகா சதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் யோகீஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ராம், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இளைஞரணி மண்டல் தலைவர் குணசேகரன்.

திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவர் நியமனம் செய்யப்படும் வரை தற்போது மாவட்ட துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வரும் கோபாலகிருஷ்ணன் மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார். தற்போதுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் அதே பொறுப்பில் தங்களது பணியினை மிகவும் சிறப்பான முறையில் தொடர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.