Tamilசெய்திகள்

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளில் ஊழல் நிலவுகிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமாக டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினோம். .தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது என்பது குறித்து அவரிடம் தெரிவித்தோம். அப்போது அவரிடம் நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.

தமிழகத்தில் 15 அமைச்சர்கள் தங்கள் துறைகள் மூலம் ஊழல் செய்து உள்ளனர். அவர்கள் குறித்த பட்டியலை பெயருடன் அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் மணல் மாபியாக்கள் கொடி கட்டி பறக்கின்றனர். அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மற்றும் திருவள்ளூரில் விடுதலை சிறுத்தை கட்சி, பா.ஜ.க பிரமுகர்கள் உள்ளிட்ட 10 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் பேச்சுரிமை இல்லை. கருத்துரிமை இல்லை. ஒரு மினி எமர்ஜென்சி போல தி.மு.க செயல்படுகிறது. அறிவை கூட விலைக்கு வாங்கும் துர் பாக்கியநிலை உள்ளது. தி. மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது.ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க ஆட்சி. அவர்கள் தற்போது ஊழலில் திளைத்து வருகிறார்கள். கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை கோடிக் கணக்கான ரூபாய் ஊழல் செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.