Tamilசெய்திகள்

திருப்பதி கோவிலில் பக்தர்களின் செருப்புகளை திருடி விற்பனை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில்களுக்கு வெளியே செருப்புகளை பாதுகாப்பாக வைக்க பல்வேறு இடங்களில் மையங்கள் உள்ளன. சில பக்தர்கள் ஆங்காங்கே செருப்புகளை விட்டு செல்கின்றனர். பக்தர்கள் விட்டு செல்லும் செருப்புகளை கும்பல் ஒன்று திருடி வருகின்றனர். விலை உயர்ந்த செருப்புகளை பக்தர்கள் பூட்டு போட்டு பூட்டி விட்டு செல்லும் நிலையும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செருப்பு அதிகளவில் திருட்டு போனது. இதுகுறித்து போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன் பேரில் போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளில் திருப்பதி மலையில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையில் நேற்று வாலிபர் ஒருவர் கையில் ஒரு பெரிய பையில் செருப்புகளை வைத்துக்கொண்டு நடந்து சென்றார். அவர் மீது போலீசாருக்கு சந்தேதேகம் ஏற்பட்டது. உடனே வாலிபரை மடக்கி விசாரித்தனர்.

அப்போது அவர் பக்தர்களின் செருப்புகளை திருடி சென்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். 5 பேர் கொண்ட கும்பல் பக்தர்களின் செருப்புகளை திருடி உள்ளனர். அந்த செருப்புகளை கீழ் திருப்பதி பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிளாட்பாரங்களில் வைத்து எந்த செருப்பை எடுத்தாலும் 100 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்தது தெரிய வந்தது.

தொடர்ந்து வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.