Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. ஹென்ட்ரிக்ஸ் 42 ரன்களும், டோனோவன் பெரேரா 48 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மார்க்ரம் அதிரடியாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் அபாட் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 191 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டது. ஜோஷ் இங்கிலிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் நிலைத்து ஆடி 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டி 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் 17.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரலிய அணி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதும், மிட்செல் மார்ஷ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.