Tamilசெய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் 19-ந்தேதி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மட்டும் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நாளை (22-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 268 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 2,670 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவினாலும் இதர அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் அதிகளவு போட்டியிட்டனர்.

சென்னை பெருநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 61 லட்சத்து 73 ஆயிரத்து 112 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் ஓட்டுப்பதிவின் போது மிக குறைந்த அளவிலேயே பதிவானது. தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சென்னை மாநகராட்சியில் தான் குறைவாக 43.65 சதவீதம் ஓட்டுப்பதிவானது.

26 லட்சத்து 94 ஆயிரத்து 785 வாக்காளர்கள் மட்டுமே தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். வாக்குப்பதிவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணக்கூடிய மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கான ஓட்டுகள் 15 மையங்களில் எண்ணப்படுகின்றன. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 மையங்களில் 37 இடங்களில் 200 வார்டுகளின் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.

37 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

ஓட்டு எண்ணும் மையங்களில் 8 மேஜைகள் முதல் 14 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து மேஜைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கையில் 2,100 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிகபட்சமாக 3 சுற்றுகள் மட்டுமே ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. பெரும்பாலான வார்டுகளின் தேர்தல் முடிவுகள் 2 சுற்றுகளிலே தெரிய வர வாய்ப்புள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வார்டு வாரியாக முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 14 வார்டுகள் வரை உள்ள ஓட்டுகள் 2 இடங்களில் எண்ணப்படுகிறது. 1 முதல் 7 வார்டுகள் வரை உள்ள ஓட்டுகள் ஒரு இடத்திலும், 8 முதல் 14 வார்டுகள் வரை மற்றொரு இடத்திலும் வார்டுகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.

அதனால் ஒரேநேரத்தில் 37 வார்டுகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. முதல் சுற்றின் முடிவு காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தெரிய வரும்.

ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு ஒரு முகவர் வீதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வார்டில் 15 வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் 15 முகவர்கள் ஒரு மேஜையில் இடம்பெறுவார்கள்.

இதுதவிர தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி மேஜையில் வேட்பாளரோ அல்லது அவரது சார்பில் ஒரு முகவரோ இடம் பெறலாம். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்வதற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும் கமி‌ஷனருமான ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குகள் 15 மண்டலங்களில் 37 இடங்களில் எண்ணப்படுகிறது. அங்கு தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 8மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய உடன் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்படும்.

16 ஆயிரத்து 657 தபால் ஓட்டு விண்ணப்பங்கள் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு முன்னதாக தபால் ஓட்டுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு வந்து சேர வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிய வரும். பிற்பகல் 3 மணிக்குள் 200 வார்டுகளுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஓட்டு எண்ணும் மையங்களில் முகவர்கள் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்கள் வார்டு மற்றும் வாக்குச்சாவடிகள் வாரியாக எண்ணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 15 மையங்களிலும் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர்ஜிவால் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை வாக்கு எண்ணிக்கைக்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 15 மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டிராங் ரூம்’ முன்பு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கையில் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சுற்றி ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

வாக்கு எண்ணும் மையங்களில் நுழைவு வாயில் மற்றும் வளாகங்களில் உள்ளூர் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த 2 இடங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வெளியாட்கள் நுழையாமல் பார்த்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வாக்கு மையமும் கூடுதல் கமி‌ஷனர் அல்லது இணை கமி‌ஷனர் கட்டுப்பாட்டில் நாளை கொண்டு வரப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் 2 துணை கமி‌ஷனர்கள் பாதுகாப்பு பணியில் மேற்பார்வையிட உள்ளனர். இவர்களுடன் உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக நுழைவு வாயில் பகுதியில் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆவடி மாநகராட்சி பகுதியில் 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு தேர்தல் களத்தில் 350 பேர் போட்டியிட்டனர். 59.13 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது.

ஆவடி மாநகராட்சியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஆவடி பட்டாபிராம் இந்து கல்லூரியில் நாளை எண்ணப்படுகிறது. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2 சுற்றுகள் வரையிலேயே ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் அதிலே முடிவுகள் தெரிந்து விடும் என்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை ஓட்டு எண்ணும் பணியில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில் 683 பேர் போட்டியிட்டனர். இங்கு 49.98 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் எண்ணப்படுகிறது. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.