Tamilசெய்திகள்

பழங்குடி சமூக மக்களின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிய முதல் மாவட்டம் வயநாடு – ராகுல் காந்தி பாராட்டு

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. அடிக்கடி வயநாடு தொகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி குறைகளை கேட்டறிகிறார்.

மேலும் தனது தொகுதியில் மக்களுக்கான திட்டங்களை கேட்டு பெற்று அதனை நிறைவேற்றியும் கொடுத்து வருகிறார். இந்த வயநாடு மாவட்டம் பழங்குடிகள் அதிகம் வசிக்க கூடிய பகுதியாகும். தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி வயநாட்டில் யாத்திரை மேற்கொண்ட போது பழங்குடி மக்களையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினரின் அடிப்படை ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் நாட்டிலேயே முதல் மாவட்டமாக வயநாடு மாறி இருக்கிறது.

இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘அதிகாரம் பெற்ற பழங்குடி சமூகமே வலிமையான இந்தியாவின் அடித்தளமாகும். அனைத்து பழங்குடியினருக்கும் அடிப்படை ஆவணங்களை வழங்கியது மற்றும் டிஜிட்டல் மயமாக்கியதில் இந்தியாவின் முதல் மாவட்டம் வயநாடு என்பதில் பெருமை கொள்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.