Tamilசெய்திகள்

பா.ஜ.கவின் 160 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியல் வெளியாகிறது

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா முழுவீச்சில் தயாராகி வருகிறது. மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலையில் டெல்லியில் நடக்கிறது.

அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், குழு உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், எடியூரப்பா, சர்பானந்தா சோனாவால், லட்சுமணன், இக்பால் சிங் லால்புரியா, சுதா யாதவ், பூபேந்திர யாதவ், ஓம் பிரகாஷ் மாத்தூர் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்படுகிறது. இந்த 160 தொகுதிகளை பொறுத்தவரை கடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறாத தொகுதிகள். ஆனால் 2 மற்றும் 3வது இடத்தை பிடித்த தொகுதிகள். இந்த தொகுதிகளை தேர்வு செய்து கடந்த 2 வருடங்களாக அந்த தொகுதிகளில் பா.ஜனதா தேர்தல் வேலைகளை செய்து வருகிறது.

தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள். அதே போல் யாரை வேட்பாளராக களம் இறக்கினால் வெற்றி வாய்ப்பு என்பது பற்றியும் தொகுதி முழுவதும் சர்வே நடத்தி மக்கள் விரும்புபவர்களை வேட்பாளர்களாகவும் தேர்வு செய்துள்ளார்கள்.

கடந்த தேர்தலில் தோற்ற தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த பணியை பா.ஜனதா மேற்கொண்டு உள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு எளிதானது என்பதால் முதற்கட்ட பட்டியலில் இந்த தொகுதிகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

இன்றைய கூட்டம் முடிந்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது பற்றியும் முடிவு செய்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் உறதி செய்யப்பட்டுவிட்டார்கள். வேலூரில் ஏ.சி.சண்முகம், கள்ளக்குறிச்சியில் பாரிவேந்தர் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோரது பெயர் அடிபடுகிறது.