Tamilசெய்திகள்

பிரதமர் மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்! – வீடியோவால் பரபரப்பு

பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து போட்டியிட தேஜ்பகதூர் யாதவ் என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இவர் எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்தபோது சப்பாத்தி சரியில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆவார். இதனால் ராணுவத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதிருப்தியில் இருந்த அவர் மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து மனுதாக்கல் செய்தார். அவரை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரித்து தனது கட்சி வேட்பாளராக அறிவித்தார்.

ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது தேஜ் பகதூர் யாதவ் 2 மனுவை தாக்கல் செய்து இருப்பது தெரிந்தது. அந்த 2 மனுக்களிலும் மாறுபட்ட தகவல்களை அவர் தெரிவித்து இருந்தார். இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அவர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இதனால் மோடியை எதிர்த்து போட்டியிடும் அவரது ஆசை நிறைவேறவில்லை.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு தேஜ்பகதூர் யாதவ் ரூ.50 கோடி பேரம் பேசும் காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், “எனக்கு ரூ.50 கோடி தந்தால் பிரதமர் மோடியை கொல்ல தயார்” என்று தேஜ்பகதூர் யாதவ் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அவர் தனது நண்பருடன் உரையாடுவது போன்று வெளியாகி உள்ள வீடியோவில் அவர் இவ்வாறு பேசுகிறார். பாகிஸ்தானியர்கள் ரூ.50 கோடி கொடுத்தால் மோடியை கொல்ல மாட்டேன். நாட்டுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் ஆனால் ஒரு இந்தியர் ரூ.50 கோடி கொடுத்தால் மோடியை கொல்ல தயார் என்றும் அவர் பேசுவது போல அந்த வீடியோவில் உரையாடல் இடம் பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோவை கண்டு பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் உண்மையானது தானா? என்று விசாரணை நடைபெற்றது.

அப்போது அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்று தேஜ்பகதூர் யாதவ் ஒத்துக்கொண்டார். அவர் இதுபற்றி கூறுகையில், “நான் ராணுவத்தில் இருந்து 2016-ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். அதை எதிர்த்து ஜன்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினேன். அப்போது டெல்லி போலீஸ்காரர் ஒருவர் என்னை வீடியோவில் படம் பிடித்தார்.

அந்த வீடியோ காட்சிகள்தான் இவை. ஆனால் நான் பிரதமர் மோடியை கொல்ல தயார் என்று சொல்லவில்லை. அந்த வீடியோ திருத்தப்பட்டுள்ளது” என்றார்.

என்றாலும் பா.ஜனதா தலைவர்கள் இது தொடர்பாக தேஜ்பகதூர் யாதவிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *