வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை, ஏமாற்றமே உள்ளது – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திமுக ஆட்சியில் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் மக்கள் பிரச்சினைகளைக் கண்டு அதிகாலையிலேயே அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் போன் செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்வார்கள் என்பதால் 5 ஆண்டுகளும் பதற்றத்துடனேயே பணியாற்றினோம் என்றும், ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் அமைச்சர்கள் ரிலாக்ஸாக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “முதலமைச்சர் சிறிய வாய்க்கால் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக போனில் விசாரிப்பார்; நீங்களாவது 5 ஆண்டுகள் டென்ஷனில் இருந்தீர்கள், நாங்கள் தினந்தோறும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று பதிலளித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மேடையில் பேசுவது எளிது ஆனால் ஆட்சியை நடத்துவது கடினம் என்றும், கே.என்.நேரு, எ.வ.வேலு, செங்கோட்டையன் போன்ற அமைச்சர்கள் விவசாயப் பின்னணி கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டபோது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், நில உச்சவரம்பு இருப்பதால் தங்களைச் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம் எனத் தெரிவித்ததால் மீண்டும் கலகலப்பு உருவானது.
இறுதியாக திமுக அரசு அள்ளிக்கொடுத்தது, தவெக அரசு கிள்ளிக்கொடுக்கிறது எனக்கூறி வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை, ஏமாற்றமே உள்ளது என தனது உரையை நிறைவு செய்தார்.
