Tamilவிளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி உ.பி வாரியர்ஸ் வெற்றி

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ் 47 பந்தில் 55 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீராங்கனை யாசிகா பாட்டியா 22 பந்தில் 26 ரன்கள் அடித்தார். உ.பி. வாரியர்ஸ் அணி சார்பில் அஞ்சலி சர்வானி, கிரேஸ் ஹாரிஸ், எக்லெஸ்டோன், தீப்தி சர்மா, கயக்வாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலிசா ஹீலி 29 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கிரண் நவ்கிர் 31 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசி நெருக்கடியை குறைத்தார்.

தஹிலா மெக்ராத் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த கிரேஸ் ஹாரிஸ் 17 பந்தில் 38 ரன்களும், தீப் சர்மா 20 பந்தில் 27 ரன்களும் ஆட்டமிழக்காமல் விளாச உ.பி. வாரியர்ஸ் 16.3 பந்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியடைந்து 4-வது இடத்தில் உள்ளது.

ஆர்சிபி அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 3-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் கடைசி இடத்திலும் உள்ளது.