Tamilசெய்திகள்

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையே மோதல்

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அமைதி நிலவி வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை டெங்நவுபால் மாவட்டத்தில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், ஆயுதமேந்திய கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டை இன்னும் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சண்டையில் காயம் குறித்த எந்த தகவலும் வெளியாகவிலலை. சூழ்நிலையை கவனித்து வருவதாக பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பௌகாக்சாயோவில் ராணுவ தடுப்புகளை அகற்ற ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

இந்த நிலையில் இன்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. மணிப்பூர் வன்முறை வெடித்தபோது, ராணுவ முகாமில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றுதான் ஐந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.