Tamilசினிமா

மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பி விசாரணை – மகளிர் போலீசார் தகவல்

நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மன்சூர் அலிகான் மீது தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் நேற்று பிற்பகல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 354-ஏ, ஐ.பி.சி. (பெண்களின் உணர்வுக்கு குந்தகம் விளைவித்தல்), 509 ஐ.பி.சி. (பெண்களை இழிவுபடுத்தி பேசுவது) ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த 2 சட்டப் பிரிவுகளும் 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்கக் கூடிய சட்டப் பிரிவுகளாகும். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, ‘மன்சூர் அலிகானிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப உள்ளோம். இந்த சம்மன் இன்று அனுப்பப்படும். மன்சூர் அலிகானை போலீஸ் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் பின்னர்தான் அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

மன்சூர் அலிகானின் வீடு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு இருக்கும் எல்லையில் உள்ள ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் தான் திரிஷா மீதான அவதூறு கருத்துக்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேட்டி அளித்த வீடியோ மற்றும் அதன் பிறகு அவர் பேசிய வீடியோக்கள் ஆகியவைகளை இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக போலீசார் கருதுகிறார்கள். வழக்கின் முக்கிய ஆவணங்களாக மன்சூர் அலிகான் பேசியுள்ள இந்த ஆடியோக்களை சேர்க்க உள்ளனர்.

இதற்காக அவர் பேசிய வீடியோக்களையும் போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது இந்த வீடியோக்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் சங்கம் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், போலீசார் அவர் மீது வழக்கு போட்டிருப்பதால் அவர் மீதான பிடி இறுகியுள்ளது.