Tamilசெய்திகள்

மேரிலேண்ட் மாநில நீதிபதி கொலை – மத்திய நீதிமன்ற நீதிபதி கோரிக்கை

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநில நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தவர் 52 வயதான ஆண்ட்ரூ வில்கின்சன் (Andrew Wilkinson). இவர் கடந்த வாரம் ஒரு விவாகரத்து வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். இதன் பிறகு அந்த வழக்கில் சம்பந்தபட்ட பெண்ணுக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்தார்.

இதையடுத்த சில மணி நேரங்களில் ஹேகர்ஸ்டவுன் பகுதியில் உள்ள வில்கின்சனின் வீட்டு வாசலில் அவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விசாரித்து வந்த வழக்கில் சம்பந்தபட்ட அப்பெண்ணின் கணவன் பெட்ரோ அர்கோட் (Pedro Argote) என்பவனை காவல்துறையினர் சந்தேகித்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மேரிலேண்ட் நீதிபதி ஆண்ட்ரூ வில்கின்சன் உயிரிழந்ததற்கு, நியூ ஜெர்சி மத்திய நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் எஸ்தர் சலாஸ் (Esther Salas), தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நீதிபதி வில்கின்சனை போன்று, நீதிபதி எஸ்தரும் சில வருடங்களுக்கு முன் ராய் டென் ஹாலேண்டர் (Roy Den Hollander) என்பவரின் வழக்கில் அவருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் சலாஸ் மீது ஆத்திரத்தில் இருந்த ராய், ஒரு டெலிவரி வாகன ஓட்டுனராக வேடமணிந்து வந்து 20 வயதே ஆன சலாஸின் மகன் டேனியல் ஆண்ட்ரியை சுட்டு கொன்று, சலாஸின் கணவர் மார்க் ஆண்ட்ரியை கடுமையான காயங்கள் ஏற்படும் அளவிற்கு தாக்கி விட்டு ஓடி விட்டான். பிறகு காவல்துறையினரால் தேடப்படும் போது தனக்கு தானே ஏற்படுத்தி கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தான்.

இப்பின்னணியில் நீதிபதி எஸ்தர் சலாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

வில்கின்சன் குடும்பத்தினரை நன்கு அறிவேன். அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல்கள். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளில் எவருக்கோ எங்கேயே அதிருப்தி இருந்து கொண்டுதான் இருக்கும். எனவே அமெரிக்காவின் அனைத்து மாநில நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் வகையில் சட்டங்கள் உருவாக்க வேண்டும்.

நியூ ஜெர்சியை போல ஒரு சில மாநிலங்களே இதற்காக போராடி வருகின்றன. பிற மாநிலங்கள் தங்களுக்கு உகந்த சட்டதிட்டங்களை நீதித்துறையில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்க வேண்டும். மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் வில்கின்சனை போன்று எத்தனை நீதிபதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய விவரங்கள் சரியான வகையில் இல்லை. நீதிபதிகளின் பாதுகாப்பை அலட்சியபடுத்தியதை நினைவூட்டுவதே வில்கின்சன் மரணம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தாங்கள் பெறும் அதிக ஊதியத்தில் இருந்து நீதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்கு தாங்களாகவே பாதுகாப்பாளர்களை நியமித்து கொள்ள வேண்டும் என ஒரு சாராரும், நீதிபதிகள் மக்களுக்கு பணியாற்றுவதால் அவர்கள் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு என மற்றொரு சாராரும் இது குறித்து சமூக வலைதலங்களில் விவாதித்து வருகின்றனர்.