Tamilவிளையாட்டு

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை போட்டி – பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஏ- பாகிஸ்தான் ஏ அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் சேர்த்தார். சாகிப்சதா பர்கான் 35 ரன்கள், முபாசிர் கான் 28 ரன்கள், ஹசீபுல்லா கான் 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது.

துவக்க வீரர் சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்தார். அபிஷேக் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகின் ஜோஸ் 53 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாய் சுதர்சன் 104 ரன்களுடனும், கேப்டன் யஷ் துல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி, குரூப்- பி பிரிவில் தான் மோதிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.