Tamilவிளையாட்டு

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் தனி விமானத்தில் நேற்று பாகிஸ்தான் சென்றனர். தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒரு நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

கடைசியாக 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆடிய ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இந்த நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பயணித்து இருப்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 4-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

பாகிஸ்தான் அதிபர், பிரதமருக்கு வழங்கப்படுவது போன்ற உயரிய பாதுகாப்பு ஆஸ்திரேலிய அணியினருக்கு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றி ஏறக்குறைய 4 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வீரர்கள் ஓட்டலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மைதானத்திற்கு பஸ்சில் செல்லும் போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். பாதுகாப்புக்கு ராணுவ ஹெலிகாப்டரும் சுற்றி வரும். ஆஸ்திரேலிய வீரர்கள் 6 வார காலமும் பலமான பாதுகாப்பு வளையத்தில் இருப்பார்கள்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றாக கவனிக்கிறது. போட்டி மற்றும் பயிற்சி தவிர மற்ற நேரங்களில் நாங்கள் ஓட்டலிலேயே அடைப்பட்டு கிடக்க வேண்டி உள்ளது. அதிர்ஷ்டவசமாக எங்களுடன் நிறைய வீரர்கள், உதவியாளர்கள் உள்ளனர்’ என்றார்.