தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தொடங்கிய புதிய திட்டம்!
தமிழ்நாட்டில் உள்ள உணவகங்கள் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவுகளின் விலையை அதிகரித்து வரும் வேளையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) பொதுமக்களைக் கவரும் நோக்கில் ஒரு புதிய அதிரடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோட்டல் தமிழ்நாடு உணவகங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 450 முதல் 500 கிராம் எடையுள்ள தரமான சிக்கன் பிரியாணி, வெங்காய ராய்த்தா மற்றும் கத்தரிக்காய் தொக்குடன் வெறும் 99 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூர், ஓசூர், ராணிப்பேட்டை, சிதம்பரம், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய 21 சுற்றுலாத் தலங்களில் உள்ள உணவகங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாமானிய மக்களுக்கும் தரமான உணவு மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடும், சமையலறைச் செலவினங்களைச் சீரமைத்துத் தரம் குறையாமல் இந்த 99 ரூபாய் சலுகை வழங்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
