தமிழகத்தில் பிறப்பு விகிதம் 1.3 ஆக குறைந்தது – அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total Fertility Rate) 1.3 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதனால் மாநிலம் படிப்படியாக முதியவர்கள் அதிகம் வாழும் சமூகமாக (Ageing Society) மாறி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
தற்போதைய மக்கள் தொகை நிலையைச் சமமாகத் தக்கவைக்கக் குறைந்தபட்சம் 2.1 என்ற பிறப்பு விகிதம் தேவைப்படும் சூழலில், தமிழகத்தில் இது பெருமளவில் சரிந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது 100-இல் 14 பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் ஐந்தில் ஒருவர் முதியவராக இருக்கும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பின்னால் இருக்கும் பொருளாதார, சமூகக் காரணங்களையும், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழல்களையும் முழுமையாக ஆய்வு செய்து அதற்கேற்பத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் துல்லியமாகப் பின்பற்றியதற்காகப் பாராட்டுவதைத் விடுத்து, புதிய தொகுதி மறுசீரமைப்பின் (Delimitation) மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனை வழங்குவது போல் இது அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
