Tamilசெய்திகள்

ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பள உயர்வுக்கான ஊதியக் கட்டமைப்பில் ’50-50 ஃபார்முலா’ – அக்சென்சர் அறிவிப்பு

உலகளாவிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்சர் (Accenture), தனது ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பள உயர்வுக்கான ஊதியக் கட்டமைப்பில் ’50-50 ஃபார்முலா’ (50-50 formula) என்ற புதிய மாற்றத்தை அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சுமார் 3.5 லட்சம் ஊழியர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள 7.8 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைப் பாதிக்கும் இந்த புதிய திட்டத்தின்படி, ஊழியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த சம்பள உயர்வில் 50 சதவீதம் மட்டுமே அவர்களின் நிரந்தர அடிப்படை ஊதியத்துடன் (Base pay) சேர்க்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் ஒரே நேரத்தில் வழங்கப்படும் ஒருமுறை மொத்தத் தொகையாக (One-time lump-sum amount) ஜூன் மாதத்தில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு ஊழியருக்கு 3 சதவீதச் சம்பள உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், அதில் 1.5 சதவீதம் அடிப்படைச் சம்பளத்திலும், மீதி 1.5 சதவீதம் ஒருமுறை மொத்தத் தொகையாகவும் வழங்கப்படும். உலகளாவிய பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊதியச் செலவினங்களைச் (Payroll costs) சீராக நிர்வகிக்கும் அதே வேளையில், ஊழியர்களின் கைகளில் உடனடிப் பணப்புழக்கத்தை வழங்குவதோடு, தங்களின் தற்போதைய பதவியிலேயே நீடிக்கும் (Stay-at-level) அதிகப்படியான ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது உள்விவரக் குறிப்பில் விளக்கியுள்ளது.

இருப்பினும், பதவி உயர்வு (Promotion) தொடர்பான சம்பள உயர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக அடிப்படை ஊதியத்திலேயே தொடர்ந்து சேர்க்கப்படும் என்றும், இந்த ஜூன் மாத ஒருமுறை மொத்தத் தொகையானது வழக்கமாக டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் வருடாந்திரப் போனஸிலிருந்து முற்றிலும் தனிப்பட்டது என்றும் அக்சென்சர் தெளிவுபடுத்தியுள்ளது.