Tamilசெய்திகள்

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ கைது!

கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரரிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பாஜக எம்.எல்.ஏ. சந்த்ரு லமானி லோக் ஆயுக்தா போலீசாரால் பிடிபட்டார்.

கர்நாடகா மாநிலம் கடாக் மாநிலத்தில் உள்ள சின்சாலி பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் விஜய் புஜார். இவர் சிறு நீர்ப்பாசனம் துறையின் கீழ் சாலையோர சுவர் அமைப்பதற்கான வேலையை பெற முயன்றுள்ளார். அப்போது இந்த வேலையை அவருக்கு ஒதுக்குவதற்கு 11 லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. சந்த்ரு லமானி கேட்டதாக தெரிகிறது. இதனால் விஜய் புஜார் லோக்ஆயுக்தா போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனால் எம்.எல்.ஏ.-வை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். ஒப்பந்ததாரர் 5 லட்சம் ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்து எம்.எல்.ஏ.-விடம் பேசியுள்ளார். எம்.எல்.ஏ.-வும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒப்பந்ததாரரிடம் இருந்து பணத்தை பெறும்போது போலீசார் எம்.எல்.ஏ-வை பிடித்தனர். எம்.எல்.ஏ.-வுடன் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருவதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.