ஐந்து நிதியாண்டுகளில் மத்திய அரசு அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.910.4 கோடி செலவு
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மத்திய அரசு அச்சு ஊடக விளம்பரங்களுக்காக மொத்தம் ₹910.4 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், இதில் அதிகபட்சமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் குழுமம் ₹78.22 கோடி ரூபாயைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் அதைத் தொடர்ந்து டைனிக் ஜாக்ரன் ₹59.14 கோடி ரூபாயும், இந்துஸ்தான் டைம்ஸ் ₹47.80 கோடி ரூபாயும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருப்பதோடு, அமர் உஜாலா (₹24.92 கோடி), இந்துஸ்தான் (₹21.56 கோடி), டைனிக் பாஸ்கர் (₹20.53 கோடி) மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (₹6.51 கோடி) ஆகிய நாளிதழ்களும் குறிப்பிடத்தக்க அளவிலான விளம்பர நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளிலுமே ஒவ்வொரு நிதியாண்டிலும் அந்த குறிப்பிட்ட நாளிதழ் குழுமமே தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், கடந்த 2014-15 முதல் 2024-25 வரையிலான 11 நிதியாண்டுகளில் அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் அனைத்திற்கும் சேர்த்து அரசு மொத்தம் ₹5,987.46 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது. அதாவது மக்கள் தொடர்பிற்காக நாளொன்றுக்குச் சராசரியாக ₹1.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த விளம்பரங்கள் செய்யப்படுவதாகத் தெரிவிக்கும் அதேவேளையில், தேர்தல்களுக்கு முன்பாக இத்தகைய பெரும் தொகையை விளம்பரங்களுக்காகச் செலவிடுவது அரசியல் நோக்கங்களுக்காகவே என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
