கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை
கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (வயது30), கார்த்தி என்ற காளீஸ்வரன் (21) மற்றும் இவர்களது உறவினரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பீளமேடு போலீசார் 8 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. 50 பக்கத்தில் முதல் குற்றப்பத்திரிகையும், 220 பக்கங்களில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் என 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. குற்ற சம்பவ இடத்தில் கைப்பற்றிய தடயங்கள், மரபணு பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தடயங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 2-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பர், விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சாட்சி பதிவுகள் முடிவடைந்தன. அரசு தரப்பு வக்கீல் பி.ஜிஷா, எதிர்தரப்பு வக்கீல் சசிகுமார் ஆகியோர் வாதம் செய்தனர். கடந்த 27-ந்தேதியுடன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் மார்ச் 7-ல்(இன்று) தீர்பளிக்கப்படும் என நீதிபதி சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
அதன்படி இன்று இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் கோவை மத்திய ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவித்து மூவருக்கும் சாகும்வரை சிறை தண்டனையை அறிவித்தார். குற்றம் நடந்த 4 மாதங்களில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
