போட்டித் தேர்வுகளுக்காக சென்னையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம் தங்கும் விடுதிகள் மோசடி செய்வதாக புகார்!
சென்னையின் கல்வி மையமாக விளங்கும் அண்ணா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் தனியார் விடுதிகள் மற்றும் பிஜி (PG) தங்குமிடங்களில் தங்கியிருந்து போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்கள், மின் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை இன்றித் தங்களின் வயிற்றிலடிக்கும் அளவுக்குக் கடுமையான சுரண்டலுக்கு ஆளாவதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
அரசு முறைப்படி அனுமதி வழங்காத பல விடுதிகள் அடிப்படை வசதிகளைக் கூட ஒழுங்காகக் தராமல், அதிகப்படியான மாத வாடகையையும் வசூலித்து வருகின்றன. இதில் பிரதானப் பிரச்சினையாக, மின் நுகர்வுக்கான அசல் மின் கட்டணப் பில் (Bill), மின் இணைப்பு எண் (Service Number), மற்றும் நுகர்வுப் பயன்பாட்டு விவரங்களை மாணவர்களிடம் காண்பிக்காமல் மறைக்கின்றனர். அத்துடன், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு வழக்கத்திற்கு மாறாகத் திட்டமிட்டு ரூ. 15 முதல் ரூ. 18 வரை மிகக் கொடூரமாகக் கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தங்களின் தங்குமிடம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால் அதிகாரிகளிடம் புகார் அளிக்கத் தயங்குவதைப் பயன்படுத்தி, விடுதி உரிமையாளர்கள் இந்தச் சட்டவிரோதச் சுரண்டலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளும், நுகர்வோர் உரிமை அமைப்புகளும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
