Tamilசெய்திகள்

வழுக்கி விழுந்து தண்டுவடம் பாதித்த 65 வயது நோயாளிக்கு மறுவாழ்வு அளித்த டாக்டர் மேத்தா மருத்துவமனை!

கடந்த பிப்ரவரி மாதம் சிம்லாவுக்குச் சென்றிருந்தபோது பனியில் தவறி விழுந்ததால் தண்டுவட பாதிப்பு மற்றும் கை, கால்கள் செயலிழப்பு ஏற்பட்ட 65 வயது ஆண் ஒருவருக்கு சென்னையில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இவர், ஓய்வெடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் சிம்லாவுக்குச் சென்றிருந்தார். அவருக்கு ஏற்கனவே நீண்ட நாட்களாக கழுத்துவலி இருந்தபோதிலும், அதன் தீவிரத்தை அறியாமல் அதனை அவர் அலட்சியப்படுத்தி இருந்தார். எதிர்பாராதவிதமாக பனியில் வழுக்கி விழுந்து கழுத்தில் அடிபட்டதால், அந்தப் பயணம் சோகத்தில் முடிந்தது. இதனால் அவரால் நடக்கவோ, கை கால்களை அசைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

முதலில் சிம்லாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் ரயிலில் இரண்டு நாட்கள் பயணம் செய்து சென்னை திரும்பினார். அவரது கவலைக்கிடமான நிலைமையைப் பார்த்து, சென்னையில் உள்ள பல மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்யத் தயங்கின. அவரது நிலைமை மேலும் மோசமடையலாம் என்றும், சுயமாக மூச்சு விட முடியாமல் வென்டிலேட்டர் உதவியை நாட வேண்டியிருக்கலாம் என்றும் குடும்பத்தினரை எச்சரித்தனர். தண்டுவடத்தில் அடிபட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டதால், அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையை இழக்காத அவரது குடும்பத்தினர், மேல் சிகிச்சைக்காக அவரை வேலப்பஞ்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நோயாளிக்கு கழுத்துப் பகுதியின் பின்பக்க நீளத் தசைநார் எலும்பாக மாறி இருப்பதைக் கண்டறிந்தனர். இது தண்டுவடத்தின் பின்புறம் உள்ள வளைந்துகொடுக்கும் தசைநார் அசாதாரணமாக கடினமாவதால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும். காலப்போக்கில், இந்த மென்மையான திசு திடமான எலும்பாக மாறி, தண்டுவடக் கால்வாயைச் சுருக்கி, மென்மையான தண்டுவடத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அவரது தண்டுவடக் கால்வாய் ஏற்கனவே சுருங்கியிருந்ததால், மற்றவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்றும் இந்தச் சிறு வீழ்ச்சி, இவருக்கு வாழ்க்கை முழுவதும் முடங்கச் செய்யும் அளவிலான பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே இருந்த இந்த நோயுடன், விழுந்ததால் கழுத்தில் ஏற்பட்ட காயமும் சேர்ந்துகொண்டதால், அவரது கைகால்களும் செயலிழந்ததோடு, சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் கட்டுப்பாட்டையும் இழந்தார்.

நோயாளிக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளித்து நிலைமை சீராக்கப்பட்ட பிறகு, டாக்டர் மேத்தா மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் குமார் மற்றும் அவரது குழுவினர், முழு மயக்க மருந்து அளித்து ஒரு சிக்கலான கழுத்து முதுகெலும்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக C2-C6 பின்புற டிகம்ப்ரஷன் (லேமினெக்டமி – laminectomy) மற்றும் பாதிக்கப்பட்ட முதுகெலும்பு பகுதிகளை சீரமைக்க திருகுகள் பொருத்தும் (lateral mass screw fixation) சிகிச்சை ஆகியவை செய்யப்பட்டன. அதிக ஆபத்து நிறைந்த இந்த அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் பாதுகாப்பை முழுமையாக உறுதிசெய்ய, அறுவை சிகிச்சையின் போதே நரம்புகளின் செயல்பாட்டை உடனுக்குடன் கண்காணிக்கும் அதிநவீன தொழில்நுட்பமான பயன்படுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவரது உடல்நிலை சீரானதும் வென்டிலேட்டர் ஆதரவிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு, அவருக்குப் பல்துறை மருத்துவக் குழுவினரின் பராமரிப்பு மற்றும் தீவிர மறுவாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் நடப்பதற்கான பயிற்சி, கைகால்களை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகியவை அடங்கும். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகளால், அவரது நரம்பு மண்டலம் மற்றும் உடல் செயல்பாடுகளில் சீரான முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவமனையில் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உடல்நிலை சீரான பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் இப்போது யாருடைய உதவியும் இல்லாமல் முழுமையாகத் தானாகவே நடக்கிறார்.

இது குறித்து டாக்டர் மேத்தா மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் குமார் கூறுகையில், “நீண்ட நாட்களாக இருக்கும் கழுத்து வலியைப் புறக்கணிப்பது மற்றும் அரிய வகை முதுகெலும்பு நோய்களைக் கண்டறியாமல் விடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. ஏற்கனவே இருந்த இந்த நரம்பு சுருக்கத்தால்தான், பனியில் வழுக்கி விழுந்தது போன்ற ஒரு சிறிய விபத்து கூட தண்டுவடத்தில் உடனடியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், முன்கூட்டியே நோயைக் கண்டறிந்து உடனடியாகத் துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார்.
“மேலும், அறுவை சிகிச்சையின் போதே நரம்புகளைக் கண்காணிக்கும் Intraoperative Neuromonitoring போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வருகையால், இன்று முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் மிகவும் பாதுகாப்பானவையாக மாறிவிட்டன. இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்து இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். இந்த அதிநவீன தொழில்நுட்பங்களுடன், எங்களின் பல்துறை தீவிர சிகிச்சை மற்றும் முறையான மறுவாழ்வு சிகிச்சைகளையும் ஒருங்கிணைத்ததால், அதிக ஆபத்துள்ள ஒரு அறுவை சிகிச்சையை மிகுந்த பாதுகாப்புடன் செய்து இந்த நோயாளியை மீண்டும் நடக்க வைக்க முடிந்தது,” என்றும் அவர் தெரிவித்தார்.

வேலப்பஞ்சாவடி டாக்டர் மேத்தா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் எஸ். ரமேஷ் பாபு கூறுகையில், எங்கள் மருத்துவமனையில், அதிநவீன அறுவை சிகிச்சைத் திறன்கள், தீவிர சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு மற்றும் பல்துறை நிபுணத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் சிக்கலான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை நிலைகளைக் கையாளுவதற்கான வசதிகள் உள்ளன. கடுமையான தண்டுவட பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு துல்லியமான அறுவை சிகிச்சை மட்டுமின்றி, அவர்கள் மீண்டும் பழையபடி செயல்பட, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த கவனிப்பும் முறையான மறுவாழ்வு சிகிச்சையும் தேவை. எங்களது மருத்துவக் குழுவினரின் நிபுணத்துவம் மற்றும் மருத்துவமனை வசதிகளின் ஆதரவுடன், சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் நோயாளியை மையப்படுத்திய முழுமையான கவனிப்பை வழங்குவதிலேயே நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.