சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் 3 வது நாளாக நீட்டிப்பு
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 2025-2030-ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:-
எங்களது போராட்டம் காரணமாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. மங்களூரு, பாலக்காடு, கொச்சி, சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 11 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் டன் கியாஸ் வீதம், 2 நாட்களில் 30 ஆயிரம் டன் கியாஸ் பாட்லிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்வது தடைப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது. ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதில் உடன்பாடு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கி கொள்வோம். இல்லை எனில் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறிப்பாக தென்னிந்திய அளவில் நாமக்கல் நகரை மையமாக கொண்டு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன்காரணமாக நாமக்கல் நகரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை பட்டறைகளில் நிறுத்தி சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.2 கோடி வீதம் சுமார் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாண்டில் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கியாஸ் டேங்கர் லாரிகளின் போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்வதால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளில் குறிப்பிட்ட நாட்கள் வரை தான் சிலிண்டர்களில் நிரப்ப கியாஸ் சேமிக்க முடியும். எனவே அந்த கியாஸ் தீர்ந்து விட்டால் சிலிண்டர்களில் நிரப்ப கியாஸ் சேமிக்க முடியும். எனவே அந்த கியாஸ் தீர்ந்து விட்டால் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்ப முடியாத நிலை உருவாகி விடும்.
இதனால் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நிலவும். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சிலிண்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
