Tamilசெய்திகள்

சென்னையில் தெருநாய்களுக்குப் பாதுகாப்பாக உணவளிக்கும் இடங்களின் பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி!

சென்னையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாகப் பொதுமக்களிடையே ஏற்படும் தேவையற்ற தகராறுகள் மற்றும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியின் கால்நடை மருத்துவத் துறை சார்பில் தெருநாய்களுக்குப் பாதுகாப்பாக உணவளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட 39 பிரத்யேக இடங்களின் (Dog Feeding Spots) அதிகாரப்பூர்வப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி மண்டலம் 1 முதல் மண்டலம் 15 வரை உள்ள கொளத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், பெசண்ட் நகர், திருவான்மியூர், பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மாநகராட்சியின் அனைத்துப் பகுதி மக்களின் பார்வைக்காகவும் இந்த இடங்கள் தெளிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில் கொளத்தூரின் ஜெயந்தி நகர் சுடுகாடு, வீனஸ் நகர், அஞ்சுகம் நகர், அண்ணா நகரின் 18-வது மெயின் ரோடு, தேனாம்பேட்டை வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள டேங்க் பண்ட் ரோடு, விருகம்பாக்கத்தின் உதயம் காலனி, பஜனைக் கோவில் தெரு, ராஜமன்னார் தெரு மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் எங்கு முறையாக உணவளிக்கலாம் என்ற விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தென் சென்னை பகுதிகளான திருவான்மியூரின் அவ்வை நகர் மற்றும் வால்மீகி நகர், பெருங்குடியின் ஏரிக்கரை தெரு மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு, பாலவாக்கத்தின் வி.ஜி.பி 7-வது குறுக்குத் தெரு, நீலாங்கரையின் சி.எல்.ஆர்.ஐ நகர், துரைப்பாக்கத்தின் சுப்புராயன் நகர் மற்றும் சுலைமான் நகர், ஒக்கியம் துரைப்பாக்கத்தின் கண்ணகி நகர், காரப்பாக்கத்தின் குப்புசாமி தெரு மற்றும் சோழிங்கநல்லூரின் நெடுஞ்செழியன் தெரு உள்ளிட்ட 39 இடங்கள் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த இடங்களை மக்கள் முறையாகப் பின்பற்றுவதன் மூலம் தெருநாய்களின் பசியைப் போக்குவதோடு, குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் சண்டைகளையும் தவிர்க்க முடியும் என்று சென்னை மாநகராட்சி நம்புகிறது.