வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்கள் – பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
உலகம் முழுவதும் வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது நிதித்துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகப் பன்னாட்டு நிதியம் (IMF) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவீன வங்கி மற்றும் நிதி சேவைகள் பெருமளவுக்கு இணையதளங்களைச் சார்ந்து இயங்கி வருவதால், வங்கிகள் மட்டுமல்லாமல் அவற்றுடன் இணைந்த பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளும் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பெரிய வங்கி அல்லது முக்கியப் பணப்பரிவர்த்தனை அமைப்பு முடங்கும் பட்சத்தில், பணம் அனுப்புதல், பெறுதல் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துதல் போன்ற அடிப்படைச் சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்படுவதுடன், இதன் தாக்கம் ஒட்டுமொத்த நிதிச் சந்தைக்கும் பரவி கடன் வழங்கும் நடவடிக்கைகளையும் கடுமையாக முடக்கக்கூடும் எனப் பன்னாட்டு நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குற்றவாளிகளால் நுட்பமான தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்படலாம் என்றாலும், அதே தொழில்நுட்பம் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்திடவும் பெரிதும் உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல வங்கிகள் ஒரே மாதிரியான தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களைச் சார்ந்திருப்பதும் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், வங்கிகள் சைபர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதுடன், எதிர்பாராத தாக்குதல்கள் நிகழும்போதும் முக்கிய நிதிச் சேவைகள் தடையின்றித் தொடரத் தேவையான மாற்று ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
