நிதி நெருக்கடி எதிரொலி – சி.எம்.டி.ஏ சார்பில் ரூ.1,340.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த 57 உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறுத்தம்
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.1,340.3 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த 57 உள்கட்டமைப்புத் திட்டங்களில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக 50 திட்டப் பணிகள் அதிரடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போதிய நிதி இல்லாததால் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்குச் சிஎம்டிஏ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நிறைவடைந்த 93 திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.211.8 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட வேண்டியுள்ள நிலையில், தற்போது வெறும் 7 திட்டங்கள் (ரூ.419.1 கோடி மதிப்பு) மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீவுத்திடலில் ரூ.191.06 கோடியில் அமையவிருந்த பிரம்மாண்டக் கண்காட்சி அரங்கம், கொளத்தூரில் ரூ.51.75 கோடியிலான குடிமக்கள் சேவை மையம், சேத்பட்டில் ரூ.37.41 கோடியில் தோபிகானா மறுமேம்பாடு, சென்னை பிரகாசம் சாலையில் ரூ.30 கோடியில் அதிநவீனப் பொது நூலகம், அடையாறு காந்தி நகரில் ரூ.31.66 கோடியில் நூலகக் கட்டிடம், அண்ணா நகரில் ரூ.19.49 கோடியில் புதிய நூலகம், பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.27.60 கோடியிலான கூடுதல் உள்கட்டமைப்பு மற்றும் பெரம்பூரில் ரூ.25.35 கோடியிலான சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்கள் இதனால் பாதியிலேயே முடங்கியுள்ளன.
முறையான நிதி அனுமதி இன்றி இத்திட்டங்கள் தொடங்கப்பட்டதும், கடந்த 20 ஆண்டுகளில் சிஎம்டிஏ சேர்த்த ரூ.2,200 கோடி நிதியம் முழுமையாகக் கரைந்துபோனதுமே இந்த நிதி முடக்கத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வெளிவட்டச் சாலை நில உரிமையாளர்களுக்கான இழப்பீடு ரூ.2,000 கோடி உட்பட சிஎம்டிஏ-விற்கு மொத்தம் ரூ.4,500 கோடி அளவிற்குப் பாக்கி நிலுவைக்கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு உடனடியாகத் தலையிட்டு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், பாதியிலேயே கைவிடப்பட்ட இந்த அரைகுறை கட்டடங்கள் நகரின் முடக்கச் சின்னங்களாகவே எஞ்சியிருக்கும் என்று ஒப்பந்ததாரர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
