Tamilசெய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – புதிய கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதையின் முக்கிய பணி நிறைவு

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தையும் (KCBT), புதிய கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தையும் இணைக்கும் 275 மீட்டர் நீள ஆகாய நடைபாதையின் (Skywalk) பிரதானப் பணிக்காக, இரயில்வே தண்டவாளங்களுக்கு மேலே ராட்சத இரும்பு உத்திரங்கள் (Girders) பொருத்தும் பணியைச் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (CMDA) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இரயில்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுப் புதனன்று இந்த உத்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து பிளேட்டிங், போல்டிங் பணிகளும், அதன் பிறகு மின் தூக்கிகள் (Lifts) மற்றும் தானியங்கிப் படிக்கட்டுகள் (Escalators) அமைக்கும் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட உள்ளன.

கடந்த 2023 டிசம்பரில் பேருந்து முனையம் திறக்கப்பட்ட போதிலும், ஒருங்கிணைந்த போக்குவரத்து இணைப்பு இல்லாததால் பயணிகள் மாநகரப் பேருந்துகளை (MTC) மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் நீடித்து வந்தது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) முன்மொழியப்பட்டு சிஎம்டிஏ நிதியுதவியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இரயில் நிலையத்தில் அமையவிருக்கும் கழிப்பறைகள் மற்றும் மின்தூக்கிகளைப் பராமரிப்பது யார் என்பதில் தெற்கு இரயில்வேக்கும் சிஎம்டிஏ-விற்கும் இடையே நிலவிய இழுபறி காரணமாகப் பணிகள் தாமதமடைந்தன.

இரயில் நிலையத்திற்கு ரூ.20 கோடி மற்றும் ஆகாய நடைபாதைக்கு ரூ.6 கோடி என மொத்தம் ரூ.26 கோடி வரை செலவிட்டுள்ள சிஎம்டிஏ, இச்சொத்துக்களை ‘தன்’ (Dhan) திட்டத்தின் கீழ் ஏற்றுப் பராமரிக்குமாறு இரயில்வேக்குக் கடிதம் எழுதியுள்ளதுடன், சென்னை இரயில்வே கோட்ட மேலாளரின் தலையீட்டிற்குப் பிறகே உத்திரங்கள் அமைக்க அனுமதி கிடைத்தது. இதனிடையே, ஜிஎஸ்டி (GST) சாலையைக் கடக்கும் எஞ்சிய நடைபாதை அமைக்கும் பணிக்கு ஐஐடி மதராஸ் (IIT Madras) நிபுணர் குழுவின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் சிஎம்டிஏ, இன்னும் இரண்டு வாரங்களில் அந்தப் பணிகளையும் தொடங்கும் என அறிவித்துள்ளது.