கஜா புயலில் பலியானவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை
கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசிய ஜி.கே.வாசன், அதன் பிறகு நிருபர்களிக்கு அளித்த பேட்டியில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சியில் மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட பாதகத்தையும், அவர்களுக்கு அரசு என்ன பணிகள் செய்ய வேண்டும் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன்.
மீனவர்களை பொறுத்த வரையில் கடும் புயல் மழை காற்றின் காரணமாக ஏராளமான படகுகள் சேதம் அடைந்த நிலையில் வேதனையில் இருக்கின்றனர். மீனவர்களின் வீடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழை, நெல், தென்னை, முந்திரி உள்ளிட்ட பயிர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பலியான குடும்பங்களுக்கு நபர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும்.
புயலால் வீடு வாசல் இழந்து நிற்கும் பொதுமக்கள், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில் அரசு நிவாரண முகாம் அமைத்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும்.
தமிழக அரசு மீட்பு பணியை முடுக்கி விட வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு அதுகுறித்த தகவல்களை கூற வேண்டும். அமைச்சர் சொல்கிற கருத்துக்களும் இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லும் கருத்துகளும் வேறு மாதிரியாக உள்ளது. அதனால்தான் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனால் தான் பொது மக்கள் அமைச்சர்களை திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளது.” என்று தெரிவித்தார்.