நடைபாதைகள் மற்றும் மழைநீர் வடிகால்களைப் பராமரிக்கும் பொறுப்பை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு
சென்னையின் மிக முக்கியப் போக்குவரத்துப் பாதையான அண்ணாசாலையில் நடைபாதைகள் மற்றும் மழைநீர் வடிகால்களைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் (GCC) ஒப்படைக்கத் மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக முன்னோடித் திட்டத்தின் கீழ், பார்க் டவுன் காயிதே மில்லத் பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலப் பகுதி தவிர்த்து விமான நிலையம் வரையிலான 12 கிலோமீட்டர் தூர அண்ணாசாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையின் நடைபாதைகள் மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்புப் பணிகள் மாநகராட்சியிடம் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை பிரதான சாலைப் பராமரிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் என்றும், நடைபாதை பராமரிப்பு, வடிகால் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகள் இடையூறின்றி நடந்து செல்வதை உறுதிசெய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை உள்ளிட்ட நகரின் பிற முக்கிய நெடுஞ்சாலைகளின் நடைபாதைப் பராமரிப்புகளும் மாநகராட்சியிடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
