Tamilசெய்திகள்

மருத்துவமனைகளில் சேவைக் கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் – மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் உத்தரவு

மருத்துவக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் கட்டண தகராறுகளைக் குறைக்கவும் அனைத்து மருத்துவமனைகளிலும் சேவைக் கட்டணப் பட்டியலை மக்கள் எளிதில் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

2010-ஆம் ஆண்டின் கிளினிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸ் விதியின்படி உள்ளூர் மொழியிலும் ஆங்கிலத்திலும் இக்கட்டண விவரங்கள் தெளிவாக இடம் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவலாக, தவறான மருந்துகள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட மருத்துவத் தவறுகளால் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 52 லட்சம் பேருக்குக் காயங்களும் பாதிப்புகளும் ஏற்படுவதாகக் சுகாதார அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நோயாளி பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்காணிக்கத் தனியாக ஒரு நோடல் அதிகாரியை நியமிக்கவும், மருந்து, அறுவை சிகிச்சை பாதுகாப்பு உள்ளிட்ட 11 முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்களை அமைக்கவும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.