நாட்டின் இரண்டு முக்கிய வழக்குகளின் தீர்ப்பு இன்று வெளியாகிறது
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.
கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே, ராமஜென்ம பூமி தொடர்பாக எம்.இஸ்மாயில் ஃபரூக் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் மூலம் மறுஆய்வு செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு வியாழக்கிழமை (இன்று) தீர்ப்பளிக்கவுள்ளது.
அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியவை சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் சுப்ரீம் கோர்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. இப்பிரிவானது, வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்கிறது.