Tamilசெய்திகள்

65வது பேராசிரியரை காதலித்தது ஏன்? – போலீசிடம் விளக்கிய மாணவி

“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.

தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.

அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர்.

இதில் இன்னொரு தகவல் என்னவென்றால் பஞ்சாப் போலீசாருடன் மகத்தின் தந்தையும் வந்து மகளை உடன் வருமாறு அழைத்ததற்கு மகத் கூறிய சில பதில்கள் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.

“வாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள்” என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார். பொருந்தாத இந்த காதல் பற்றி பஞ்சாப் மற்றும் ராமேசுவரம் போலீசார் எடுத்துக்கூறியும் அதை மகத் பொருட்டாகவே கருதவில்லை.

3 மகன்கள், ஒரு மகளுக்கு தந்தையான ஜெய்கிருஷ்ணனிடமும் போலீசார் பேசிப்பார்த்தனர். அவரின் மகள் வயதுடைய மகத்தை விட்டு விலகி விடுமாறு போலீசார் கேட்ட போது அவரும் பிரிய மறுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக நடந்த விசாரணை தொடர்பாக போலீசார் கூறிய தகவல்கள் வருமாறு:-

மகத் பள்ளிக்கூடத்தில் படித்த போது, அவருக்கு தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் பாடம் நடத்தி இருக்கிறார். இருவரது வீடும் அருகருகே உள்ளது. எனவே பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய பின்பும் அவ்வப்போது ஜெய்கிருஷ்ணன் வீட்டுக்கு மகத் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த உறவு முறையை யாரும் தவறாக நினைக்காததுதான் அவர்கள் திசைமாற காரணமாக அமைந்தது விசாரணையில் தெரியவந்தது.

மகத்தின் தந்தை வங்கி அதிகாரி ஆவார். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தனர். ஆனால், மகத்தின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுபாட்டை அவருடைய குடும்பத்தினர் கண்டறிந்து எடுத்துக்கூறி சரிசெய்யாமல் விட்டதுதான் இந்த காதலுக்கு தூபம் போட்டது போல் அமைந்துவிட்டது. பள்ளிப்படிப்பை முடித்து சட்டக்கல்லூரி மாணவியான பின்பு டியூசன் என்ற பெயரில் ஜெய்கிருஷ்ணனை சந்தித்து வந்தார்.

நெருக்கம் அதிகமாகி ஓராண்டுக்கு முன்பே அவர்கள் ரகசிய திருமணமும் செய்துள்ளனர். அடிக்கடி திருட்டுத்தனமாக வெளியே சென்று வந்துள்ளனர். வெளியில் அறை எடுத்தும் தங்கினர். இதை எல்லாம் மகத் மீதுள்ள நம்பிக்கையில் அவரது பெற்றோர் தவறாக நினைக்கவில்லை.

இனியும் திருட்டு வாழ்க்கை வாழ விரும்பாமல் எங்காவது சென்றுவிடலாம் என்று நினைத்து ஊரில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றனர். பின்னர் ராமேசுவரம் வந்து தந்தை-மகள் என்று கூறி அறை எடுத்தும் தங்கினர்.

போலீசாரிடம் பிடிபட்ட போது, “உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகத் அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள்” என்பதுதான் காதலுக்கான காரணம் என ஜெய்கிருஷ்ணன் தெரிவித்தார்.

மகத் கூறுகையில், “எங்களை பஞ்சாப்புக்கு அனுப்பினால் இருவரது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. சிறு வயதில் இருந்தே என் மீது அவர் காட்டிய அக்கறைதான் ஜெய்கிருஷ்ணன் மீது மதிப்பை ஏற்படுத்தியது. நாளடைவில் என்னை அறியாமலேயே அவர் மீது அளவற்ற பாசம் வைத்துவிட்டேன். என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான். பஞ்சாப்புக்கு நாங்கள் போக விரும்பவில்லை. நான் மேஜர் என்பதால் யாருடன் வாழ வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை எனக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கோர்ட்டு உத்தரவு குறித்து தெரிவித்த பின்னர்தான் பஞ்சாப் திரும்ப இருவரும் சம்மதித்து, ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *