Tamilசெய்திகள்

பன்றி காய்ச்சல் பரவுவதை எப்படி தடுப்பது? – சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:

“எச் 1 என்1 எனப்படும் “இன்புளுயன்சா” வைரஸ் கிருமிகளால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. 1920-30களில் இந்த நோய் பன்றிகள் இடையே காணப்பட்டதால் பன்றி காய்ச்சல் என அழைக்கப்பட்டது. இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை. தற்போது இந்நோய் பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்து மட்டுமே மற்றவர்களுக்கு பரவுகிறது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் பன்றி காய்ச்சல் வைரஸ் அதிகமாக பரவக்கூடிய காலமாகும். அதனால் அரசு முன் எச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 25 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பன்றி காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுப் பகுதிகளில் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. நெல்லை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை போன்ற மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

பன்றி காய்ச்சல் தொற்றினால் உயிர் இழப்பு ஏற்படுவது இல்லை. ஏற்கனவே வேறு பல நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டதால் உயிர் இழப்பு நடந்துள்ளது. பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனி வார்டுகளில் அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பன்றி காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலியாகும். ஒரு சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்று போக்கும் ஏற்படலாம்.

இந்த கிருமி தொற்று ஏற்பட்டவர் இருமும் போது அல்லது தும்மும் போது வெளிப்படும் நீர்த்தி வலைகள் மூலம் நோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த நீர் நிலைகள் படிந்த பொருட்களை தொடும் பொழுது கைகளில் இந்த கிருமி ஒட்டிக் கொள்கிறது. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும் போது கிருமி தொற்று ஏற்படுகிறது.

இன்புளுயன்சா வைரஸ் கிருமிகள் தரைபரப்பு, கதவு மற்றும் மேஜைகள் போன்ற பரப்புகளில் பல மணி நேரம் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ந்த இடங்களில் 2 நாட்கள் வரை கூட கிருமிகள் இருக்கலாம். கதவு கைப்பிடிகள், மேஜை பரப்பு, நாற்காலிகள், மின் சுவிட்சுகள், தொலைபேசி போன்றவற்றை தினமும் ஒரு முறையாவது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் கைகளை கழுவுவதன் மூலமும் நோய் தொற்றை தடுக்கலாம்.

பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். வீட்டில் இருந்து பள்ளிக்கோ, அலுவலக பணியிடத்திற்கோ சென்றவுடன் கை கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய், மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.

பன்றி காய்ச்சல் குணமாகவும் மேலும் நோய் எதிர்ப்பு சிகிச்சைக்காகவும் OSeltamivir என்கிற சக்தி வாய்ந்த மருந்து உள்ளது. எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். எச்1 என் 1 காய்ச்சலாக இருப்பின் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் இந்த மருந்து உட்கொண்டால் எளிதில் குணப்படுத்தலாம்.

பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும். பள்ளி, அலுவலகம் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ளவும். பயன்படுத்திய கைக்குட்டை மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

பஸ், ரெயில், மாடிப்படி, எஸ்கலேட்டர், கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள், டிக்கெட் கவுண்டர்கள், லிப்ட் போன்றவற்றில் உள்ள ஸ்விட்சுகள், திரையரங்குகள், பொது இடங்களில் உள்ள இருக்கைகள் போன்ற அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம். 044-24350 496, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற ஆலோசனை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *