குலு தசரா திருவிழா கோலாகலமாகக் தொடங்கியது
16 ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியமாகத் தொடரும் புகழ்பெற்ற ஏழு நாள் குலு தசரா திருவிழா கோலாகலமாகக் தொடங்கியது. இந்தியாவின் பிற பகுதிகளில் தசரா விழா விஜயதசமியுடன் நிறைவடையும் நிலையில், குலு பகுதியில் அன்றுதான் இத்திருவிழாவின் கொண்டாட்டங்கள் தொடங்குவது இதன் சிறப்பம்சமாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க குலு மைதானத்தில் கடந்த 500 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தெய்வங்கள் ஒன்றுகூடுவது இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைப்பதாக மானுடவியல் நிபுணர் சோனாலி குப்தா குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் 347-க்கும் மேற்பட்ட தெய்வங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட தெய்வங்கள் விழாவில் பங்கேற்க வந்துள்ளன.
இதையொட்டி, குலு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு அலங்காரங்களுடன் வருகை தந்த தெய்வங்கள், பகவான் ரகுநாதரின் இருப்பிடமான ரகுநாத்பூர் சென்று மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, பகவான் ரகுநாதர் தனது பல்லக்கில் அமர்ந்து தால்பூர் நோக்கிப் புறப்பட்ட நிலையில், பாரம்பரிய வாத்தியங்களின் இன்னிசையும் பக்தி முழக்கங்களும் எண்திசைகளிலும் எதிரொலிக்க ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாகக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
