Tamilசெய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – 7 வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட சென்னை ஐ.ஐ.டி

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனமும், மும்பை ஐ.ஐ.டி. நிறுவனமும் இடங்களை பிடித்துள்ளன. ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடத்தில் 6 ஐ.ஐ.டி.க்கள் இடம் பெற்றுள்ளன.