பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!
கோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி கோவையை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறைச்சி கடைகளாக அங்கீகரிப்படாத இடங்களில் பசுக்களையும், கன்றுகளையும் இறைச்சிக்காக வதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை, ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023-ஐ சுட்டுக்காட்டிய நீதிபதிகள், இறைச்சி வெட்டுதல் என்பது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட அனுமதிக்க முடியாது என்றும், பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகல் உத்தரவிட்டனர்.
