மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது – தம்பிதுரை
கரூர் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்கள் பதவியை இழந்து நிற்கிறார்கள். அ.தி.முக. ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. ஜெயலலிதா வழியில் 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். அதற்கு பின்னரும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க.வே தமிழகத்தை ஆட்சி செய்யும்.
தி.முக.வில் குடும்ப அங்கத்தினருக்கே அதிகாரத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் டீக்கடை நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முதல்வர் ஆக்கினார். உண்மையாக உழைத்தால் அ.தி.மு.க.வில் உயர் பதவிக்கு வர முடியும். மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டி சட்டையை கிழித்துக் கொண்டு ரோட்டுக்கு கூட வந்து பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.
கருணாநிதியுடன் தி.மு.க.வின் உதயசூரியனும் அஸ்தமனம் ஆகிவிட்டது. ஆகவே மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.