Tamilசெய்திகள்

டாஸ்மாக் பார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்களுக்கு (பார்கள்) இரண்டு ஆண்டுகள் தற்காலிக உரிமம் வழங்கப்படும் நிலையில், அவற்றின் செயல்பாடுகளுக்குப் பல்வேறு கண்டிப்பான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் நிர்வாகம் விதித்துள்ளது.

அதன்படி, பார்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்யக் கூடாது என்பதோடு, விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் FSSAI உணவு பாதுகாப்புச் சான்றிதழும், குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் ஐஎஸ்ஐ (ISI) தரச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். பார்களில் நொறுக்குத் தீனிகளை கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது, தனியாக மது பாட்டில்களை விற்பனை செய்யவோ அல்லது இருப்பு வைக்கவோ கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட வேலை நேரத்தில் மட்டுமே பார்கள் இயங்க வேண்டும்; விடுமுறை நாட்களிலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டோ இயங்கினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்ததாரர்கள் ஜிஎஸ்டி (GST), வருமான வரி (TDS/TCS) உள்ளிட்ட சட்டப்பூர்வ வரிகளையும், தொழிலாளர் நலச் சட்டங்களான EPF, ESIC திட்டங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதோடு, மாவட்ட மேலாளரால் மேற்கொள்ளப்படும் மாதாந்திர ஆய்வுகளில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்றாலோ அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ காப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு, பார்களுக்கு உடனடியாகச் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.